உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துறைமுகத்தில் பாஸ் வழங்கும் இயந்திரம் பழுது 20 கி.மீ.,க்கு அணிவகுத்த கன்டெய்னர் லாரிகள்

துறைமுகத்தில் பாஸ் வழங்கும் இயந்திரம் பழுது 20 கி.மீ.,க்கு அணிவகுத்த கன்டெய்னர் லாரிகள்

காசிமேடு, சென்னை துறைமுக கன்டெய்னர் முனைய நுழைவாயிலில் பாஸ் வழங்கும் இயந்திரம் பழுதானதால், 20 கி.மீ.,க்கு வரிசை கட்டி நின்ற கன்டெய்னர் லாரிகளால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தில், சி.சி.டி.எல்., மற்றும் சி.ஐ.டி.பி.எல்., ஆகிய தனியார் சரக்கு பெட்டக முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, இந்த துறைமுகத்தை சார்ந்து, சென்னையையொட்டி, 30க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொதுத்துறை சரக்கு பெட்டக நிலையங்கள் அமைந்துள்ளன. துறைமுகத்தில் உள்ள சரக்கு பெட்டக முனையங்கள் மூலம், ஆண்டுக்கு 10 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்படுகின்றன. இந்நிலையில், சென்னை துறைமுக ஜீரோ கேட் கன்டெய்னர் முனைய நுழைவாயிலில், பாஸ் வழங்கும் இயந்திரம் நேற்று முன்தினம் பழுது காரணமாக செயல்படவில்லை. இதனால், காசிமேடு ஜீரோ கேட் துவங்கி, மணலி புதுநகர் வரை, 20 கி.மீ.,க்கு கன்டெய்னர் லாரிகள் வரிசை கட்டி நின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை துறைமுகத்தின் ஜீரோ கேட் நுழை வாயிலில், பாஸ் வழங்கும் இயந்திரம் பழுதானதால், நேற்று முன்தினம் கன்டெய்னர் லாரிகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, அப்பிரச்னை முடிவுக்கு வந்து, கன்டெய்னர் லாரி போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி