உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10.5 சென்ட் நிலத்தை தானமாக வழங்க இழுபறி இரணியம்மன் கோவில் அருகே தொடரும் நெரிசல்

10.5 சென்ட் நிலத்தை தானமாக வழங்க இழுபறி இரணியம்மன் கோவில் அருகே தொடரும் நெரிசல்

பெருங்களத்துார்:தென் மாவட்டங்களில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், சென்னை நகருக்குள் நுழையும் இடமாக, பெருங்களத்துார் உள்ளது.தவிர, புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள், வார விடுமுறை, பண்டிகை நாட்களில், தங்களது சொந்த ஊருக்கு செல்லும்போதும், மீண்டும் சென்னைக்கு வரும்போதும், ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசலில் சிக்குவது வழக்கம்.பெருங்களத்துார் முதல் மகேந்திரா சிட்டி வரை, ஐ.டி., நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் பெருகிவிட்டதால், 24 மணி நேரமும், சாலை, 'பிசி'யாக காணப்படுகிறது.இதை கருத்தில் கொண்டு, பெருங்களத்துார் முதல் மகேந்திரா சிட்டி வரை, ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.ஆனால், பெருங்களத்துாரில் இரணியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியில், பல மீட்டர் துாரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை.இரணியம்மன் கோவிலை, பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, வண்டலுார் மக்கள், கிராம தேவதையாக வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.அதனால், கோவில் அமைந்துள்ள இடத்தில், தினமும் 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இக்கோவில் அமைந்துள்ள இடத்தில், சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள அளவை, நெடுஞ்சாலைத் துறையினர் அளந்து, குறியிட்டுள்ளனர்.அதே நேரத்தில், பின்புறத்தில் உள்ள தனியார் நிறுவனம், தங்கள் பகுதியில் கோவிலை இடமாற்றி வைக்க, 10.5 சென்ட் நிலத்தை, கோவில் பெயரில் செட்டில்மென்ட் தானமாக வழங்க முன்வந்தது.ஆனால், அதற்கான நடவடிக்கைகள் தாமதமாகி வருகிறது. தொடரும் இழுபறியால், பெருங்களத்துாரில், நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வருகிறது.ஹிந்து அறநிலையத் துறை உயர் அதிகாரிகள், இவ்விஷயத்தில் தீவிரம் காட்டி, தனியார் நிறுவனத்திடம் இருந்து நிலத்தை பெற்று, கோவிலை இடமாற்றி வைத்து, சாலை விரிவாக்கம் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவிலுக்காக நிலம் வழங்க, பின்புறம் உள்ள தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, கோவிலை இடம் மாற்றும் பணி துவங்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை