மாநகராட்சி இணையதளம் பாதிப்பு பிறப்பு சான்று கிடைக்காமல் அவதி
சென்னை, சென்னை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி எல்லையில் நடைபெறும் பிறப்பு, இறப்புகளை, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் https://chennaicorporation.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.ஒவ்வொரு சான்றிதழும் குறைந்தது, 15 முதல் 30 நாட்களில், சம்பந்தப்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களாக மாநகராட்சியின் இணையதளத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய முடியவில்லை என, சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது:இணையதள சேவை பாதிப்பால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் சேவை முடங்கியுள்ளது. சில அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் கேட்டாலும், சான்றிதழ் கொடுக்க முடியாத நிலை தொடர்கிறது. எதனால் பழுது என, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதிலளிக்காமல் உள்ளனர். இந்த மூன்று வாரங்களில், 1,000க்கும் மேற்பட்ட பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தேக்கமடைந்துள்ளன. இந்த விவகாரத்தில், விரைந்து பாதிப்பை சரி செய்ய வேண்டும். அதேநேரம், அக்., இரண்டாம் வாரத்திற்கு முன் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.