சுரங்கப்பாதை மராமத்து பணிகளை தள்ளி வைக்க கவுன்சிலர் கோரிக்கை
திருவொற்றியூர், சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, நேற்று மதியம் 5வது வார்டுக்குட்பட்ட, மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதை, பம்ப் செட் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.அப்போது, உடனிருந்த 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம், ரயில்வே குளத்தை துார்வாரி, பாரம்பரியமாக இருந்த சலவை துறையை மீண்டும், அதே பகுதியில் அமைத்து கொடுக்க வேண்டும் எனக் கோரினார்.மேலும், ஆண்டு முழுதும் ஊற்று நீர் வரும் சுரங்கப்பாதையை, நவீன தொழில்நுட்பம் முறையில் புனரமைத்துக் கொடுக்க வேண்டும் என, கோரினார்.தொடர்ந்து, விம்கோ நகர் மற்றும் அண்ணாமலை நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதையிலும் மராமத்து பணிகளை மேற்கொண்டால், திருவொற்றியூர் மேற்கு பகுதி ஸ்தம்பித்து போய் விடும்.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என, விவாதிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்திற்கு பின், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை பணிகளை மேற்கொள்ளலாம் என, அதிகாரிகளுக்கு, துணை கமிஷனர் அறிவுறுத்தினார்.