நங்கநல்லுாரில் தம்பதி தற்கொலை
பழவந்தாங்கல்,நங்கநல்லுார், ரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் அசோகன், 45; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி புனிதா, 40. சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்தார்.இவர்களுக்கு, 10 மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள், கோடை விடுமுறைக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.இந்த நிலையில், இரண்டு நாட்களாக வீடு திறக்கப்படவில்லை. இதனால், வீட்டின் உரிமையாளர் சேதுராமன் கதவை தட்டினார்.நீண்ட நேரமாக திறக்காததால், ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது, அசோகன் வரவேற்பறையிலும், புனிதா படுக்கையறையிலும் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.பழவந்தாங்கல் போலீசார், கதவை உடைத்து இரண்டு பேரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.தற்கொலைக்கு, குடும்ப பிரச்னையா அல்லது வேறு எதாவது காரணங்களா என, போலீசார் விசாரிக்கின்றனர்.