கிரைம் கார்னர்
மொபைல் போன் பறித்தோருக்கு 'காப்பு' ஆர்.கே.நகர்: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வி, 38; மாநகராட்சி துாய்மை பணியாளர். கடந்த 25ம் தேதி இரவு ஆர்.கே.நகர் பகுதியில் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த இருவர், செல்வியின் மொபைல் போனை பறித்து தப்பினர். ஆர்.கே., நகர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரவீன், 28, மற்றும் 17 வயது சிறுவனை, நேற்று கைது செய்தனர். வழிப்பறி திருடர்கள் மூவர் சிக்கினர் பெரவள்ளூர்: அகரம் சந்திப்பு பகுதியில், நேற்று முன்தினம் இரவு பொதுமக்களிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட, கொளத்துார் முபிசீர் அகமது, 24, பெரவள்ளூர் கோபிநாத், 19, கிரிநாத், 19, ஆகியோரை பெரவள்ளூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர் . ஆட்டோக்களை சூறையாடியோர் கைது பேசின்பாலம்: புளியந்தோப்பு, நரசிம்ம நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெயகுமார் மற்றும் அவரது நண்பர்களின் நான்கு ஆட்டோக்களை, 27ம் தேதி இரவு மர்ம நபர்கள் சூறையாடினர். இது குறித்து, பேசின்பாலம் போலீசார் விசாரித்தனர். இதில், சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த ஆப்ரகாம் என்பவரின் பிறந்த நாளை கொண்டாடிய 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மது போதையில் ஆட்டோ கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஜவஹர் நகரைச் சேர்ந்த கணேஷ், 27, விமல், 28, அப்பு, 21, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.