உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

'பார்க்கிங்'கில் நிறுத்தியிருந்த பல்சர் திருட்டு சேலையூர்: சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 35. தனியார் நிறுவன ஊழியர். மார்ச் 4ம் தேதி இரவு, அடுக்குமாடி குடியிருப்பு பார்க்கிங் பகுதியில், பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்த போது, வாகனம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மற்றொரு பல்சர் வாகனத்தில் வந்த இருவர், பல்சர் பைக்கை திருடி சென்றது பதிவாகியிருந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர். லாரி கடத்திய வழக்கில் இருவர் சிக்கினர் நந்தம்பாக்கம்: அயனம்பாக்கம், பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார், 40. இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் நடத்தி வருகிறார். கெருகம்பாக்கத்தை சேர்ந்த தினகரன், 41, என்பவரிடம் கடனாக வாங்கிய பணத்தை, மகேஷ்குமார் திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். பணம் கொடுத்து ஏமாந்த தினகரன், கும்பலுடன் சேர்ந்து மகேஷ்குமாருக்கு சொந்தமான லாரியை, கடந்த 4ம் தேதி, ஓட்டுநர் மேகதுரையை தாக்கி கடத்தி சென்றனர். இதுகுறித்து விசாரித்த நந்தம்பாக்கம் போலீசார், தினகரன், குன்றத்துாரை சேர்ந்த பிரவீன், 26, ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர். சவாரி செய்வது போல நடித்து ஆட்டோ திருட்டு கொடுங்கையூர்: பழைய வண்ணாரப்பேட்டை, சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் சையது அகமது, 55; ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோவில், நேற்று மர்ம நபர்கள் இருவர், மாதவரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கொடுங்கையூர் வரை சவாரி செய்தனர். கொடுங்கையூர், குப்பைமேடு எடைமேடை வந்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கிய அவர்கள், காசு கொடுப்பது போல் பேசி கொண்டே இருவரும் நடந்து சென்றனர். அப்போது, பணத்தை வாங்குவதற்காக, சையது அகமது ஆட்டோவில் இருந்து இறங்கிய நேரத்தில், ஒருவர் ஆட்டோவை திருடிச் சென்றார். மற்றொருவர், சையது அகமது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, 1,000 ரூபாயை திருடி தப்பினார். கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர். கோவில் உண்டியல் பணம் திருட்டு ஆவடி: ஆவடி அடுத்த நெமிலிச்சேரி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் சங்கரன், 68. அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் நிர்வாகி. இவர், நேற்று காலை, வழக்கம் போல் கோவிலை திறக்க சென்றபோது, 'கிரில் கேட்' பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து, 5,000 ரூபாய் காணிக்கை திருடு போனது தெரிந்தது. பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர். சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபருக்கு 'போக்சோ' கண்ணகி நகர்: பெரும்பாக்கம், நேதாஜி நகர் பிரதான சாலையில் ஷபீக் உசேன், 33, என்பவர், துணிக்கடை நடத்தி வருகிறார். இவர், கடையில் பணிபுரிந்த 15 வயது சிறுமியிடம், பத்து நாட்களுக்கு முன் சில்மிஷம் செய்துள்ளார். கண்ணகி நகர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததும், ஷபீக் உசேன் தலைமறைவானார். நேற்று, இவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 'சிலிண்டர்' திருடியவருக்கு 'காப்பு' சென்னை: மயிலாப்பூர், நைனார் நாடார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ், 53. இவரது வீட்டில் சமையல் காஸ் சிலிண்டர் காலியானதால், புதிய சிலிண்டருக்காக பதிவு செய்திருந்தார். இந்நிலையில், காலியான சிலிண்டரை குடியிருப்பு வளாகத்திற்குள் வைத்து, வெளியூர் சென்றுள்ளார். பின், கடந்த 4ம் தேதி வந்து பார்த்தபோது, காஸ் சிலிண்டர் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து விசாரித்த மயிலாப்பூர் போலீசார், சிலிண்டரை திருடிய ஜெயபிரகாஷ், 32, என்பவரை கைது செய்தனர். பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு தாம்பரம்: கிழக்கு தாம்பரம், ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் அனிதா. நேற்று காலை, வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றார். மாலை திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, ஒரு மடிக்கணினி, 20,000 ரூபாய், ஒரு சவரன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர். வாகனம் மோதி காவலாளி உயிரிழப்பு படப்பை: படப்பை அருகே கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் சம்பாசிவம், 65. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை 6:00 மணியளவில், பணிமுடிந்து வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் கரசங்கால் பகுதியை கடக்க நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வேமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சம்பாசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர். 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் சேலையூர்: வேங்கைவாசல், மேடவாக்கம், பள்ளிக்கரணை, செம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து, மூட்டை மூட்டையாக அரிசி வாங்கி வந்து, வேங்கைவாசல், பாரதி நகர், 2வது தெருவில் பதுக்கி வைத்து, பல்வேறு இடங்களுக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில், தாம்பரம் உணவு பொருள் வழங்கல் துறை உதவி கமிஷனர் நேற்று, அதிரடி சோதனை நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1,500 கிலோ அரிசியை பறிமுதல் செய்தார். ஸ்கூட்டர் திருடிய சிறுவன் கைது வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் மணிமாறன், 42. சூப்பர்வைசர். இவர், கடந்த 5ம் தேதி வீட்டின் முன் நிறுத்தி சென்ற ஸ்கூட்டரை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து விசாரித்த வண்ணாரப்பேட்டை போலீசார், கள்ள சாவியை பயன்படுத்தி ஸ்கூட்டரை திருடிய, 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர். பின், கெல்லீஸில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவனை சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !