சி.எஸ்.ஐ.ஆர்., 84வது நிறுவன தின கொண்டாட்டம்
தரமணி சி.எஸ்.ஐ.ஆர்.,- என்ற தேசிய கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில், 84வது நிறுவன தின நாள் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர்களாக, புதுடில்லி, அனுசந்தான் தேசிய ஆராய்ச்சி நிறுவன தலைமை செயல் அதிகாரி சிவகுமார் கல்யாணராமன், நேஷனல் ஆட்டோமோட்டிவ் டெஸ்ட் டிராக்ஸ் இயக்குநர் மனீஷ் ஜெய்ஸ்வால் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், சிவகுமார் கல்யாணராமன் பேசியதாவது: நாட்டிலுள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி கல்லுாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் புதிய கண்டுப்பிடிப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் வகையில், மத்திய அரசு, 50,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதை, மாணவர்கள், நிறுவனங்கள், கல்லுாரிகள் முறையாக பயன்படுத்தி, தங்கள் புதிய கண்டுபிடிப்பால், நம் நாடு உலக அரங்கில் முன்னிலை வகிக்க பங்காற்ற வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்வித்துறை, 'ஸ்டார்ட் -அப்' நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து, சர்வதேச அளவில் தரமும், தாக்கமும் கொண்ட ஆராய்ச்சியை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், நிறுவனத்தின் பேராசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.