தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக 300 தனியார் பஸ்கள் இயக்க முடிவு
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு, அரசு பேருந்துகளுடன், 300 தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருந்து லட்சகணக்கானோர் சொந்த ஊருக்கு செல்வர். மக்கள் சிரமம் இன்றி செல்ல வசதியாக, அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை தவிர, கூடுதலாக தனியார் பேருந்துகளும் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து தேவைக்கு ஏற்ப தனியார் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், பேருந்து தேவை அதிகரித்து வருகிறது. வரும் தீபாவளி பண்டிகையொட்டி, அரசு பேருந்துகளில் மட்டும் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் செல்வர் என, கணக்கிடப்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருக்கும் போது மட்டுமே தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட நாட்களுக்கு இயக்கப்படும். தீபாவளி பண்டிகையின் போது, சென்னையில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி உட்பட பல்வேறு இடங்களுக்கு பயணியர் தேவைக்கு ஏற்ப, தனியார் பேருந்துகளையும் இணைத்து இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, 300 தனியார் பேருந்து களை இயக்க முடிவு செய்துள்ளோம். மேலும், தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். அதில், ஒரு கி.மீ.,க்கு எவ்வளவு கட்டணம் என்பது நிர்ணயிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.