பழுதான பேட்டரி வாகனங்கள் ஓ.எம்.ஆரில் துாய்மை பணி மந்தம்
சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., பகுதியை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன.மொத்தம், 43 சதுர கி.மீ., பரப்பில், 92,000 வீடுகளில், 3.60 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம்.துாய்மை பணியை, 'உர்பேசர் சுமித்' நிறுவனம் செய்கிறது. வீடு வீடாக குப்பை சேகரிக்க, 190 பேட்டரி வாகனங்களும், 490 ஊழியர்களும் உள்ளனர். தெருக்களில் உள்ள, 815 தொட்டிகளில் சேரும் குப்பையை அகற்ற, 17 லாரிகள் உள்ளன.வார்டுதோறும் மேற்பார்வையாளர்கள், பகுதி அதிகாரிகள், மண்டல அதிகாரி இருந்தும், முறையாக குப்பை சேகரிப்பதில்லை என புகார் எழுகிறது.காரணம், பேட்டரி வாகனங்கள் பழுதடைவதாக ஊழியர்கள் கூறுகின்றனர். தினமும் வார்டுதோறும், 3 முதல் 5 பேட்டரி வாகனங்கள் பழுதடைகின்றன.பாதி வழியில் நிற்பதால், மற்றொரு வாகனத்தில் கட்டி இழுத்தும், காலால் தள்ளி விட்டும் இயக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால், ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆரில் முறையாக குப்பை அள்ளாததால், சுகாதார பிரச்னை ஏற்படுகிறது.மாநகராட்சி உயர் அதிகாரிகள் தலையிட்டு, குப்பை சேகரிப்பதில் உள்ள சிக்கலை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.