சாலைகள் சீரமைப்பில் தாமதம் மெட்ரோ ஒத்துழைத்தால் சாத்தியம்
சென்னை, மழையால் பாதித்த சாலைகளை சீரமைக்கும் பணியை துவங்கியுள்ள நெடுஞ்சாலைத் துறையினர், மெட்ரோ ரயில்வே நிர்வாக ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.மாநில நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, சென்னையில் 372, காஞ்சிபுரத்தில் 1,137, திருவள்ளூரில் 1,985, செங்கல்பட்டில் 1,306 கி.மீ., என மொத்தம், 4,801 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. சென்னையில், அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, நுாறடி சாலை, மவுண்ட் - பூந்தமல்லி சாலை, ஜி.என்.டி., சாலை, மாதவரம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல சாலைகள், வடகிழக்கு பருவமழையால் கடும் சேதமடைந்துள்ளன.திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், 500 கி.மீ.,க்கு மேல் சாலைகள் சேதம் அடைந்துள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. மழை ஓய்ந்துள்ள நிலையில், சேதம் அடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினருக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகளை, நான்கு மாவட்டங்களிலும் நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பல சாலைகளில் மெட்ரோ ரயில்வே வழித்தட கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலைகளை, மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத் துறையினர் ஒப்படைத்துள்ளனர்.இவற்றில் பல சாலைகளில், மாநகராட்சி வாயிலாக மழைநீர் கால்வாய் கட்டுமானம், மின் வாரியம் வாரியாக கேபிள் புதைக்கும் பணிகள், குடிநீர் வாரியம் வாயிலாக குழாய்கள் பொருத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால், சேதமடைந்த சாலைகளை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் புனரமைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதுவும் போக்குவரத்து பாதிப்புக்கு முக்கிய காரணம்.எனவே, இச்சாலைகள் பராமரிப்பிலும் கவனம் செலுத்தும்படி, மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம், நெடுஞ்சாலைத்துறை ஒத்துழைப்பு கோரியுள்ளது.இதற்காக, மெட்ரோ ரயில்வே, மாநகராட்சி, குடிநீர், மின்வாரிய அதிகாரிகளுடன், நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட பணிகளை துவக்க உள்ளனர்.