அருட்கோட்டம் முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
தண்டையார்பேட்டை, அருட்கோட்டம் முருகன் கோவிலில், சித்ரா பவுர்ணமி பெருந்திருவிழாவையொட்டி, 5,000 பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.தண்டையார்பேட்டை, நேதாஜி நகரில், பழமையான அருட்கோட்டம் முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமியையொட்டி, பெருந்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, 58ம் ஆண்டு பெருந்திருவிழா, ஏப்., 30ம் தேதி, வீரபாகு தேவர் உற்சவம், மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பால்குடம் மற்றும் காவடி எடுத்தல் நிகழ்ச்சி, நேற்று மதியம் நடந்தது. அதன்படி, நேதாஜி நகர் - விநாயகர் கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமி சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, 3,000க்கும் அதிகமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக அணிவகுத்தனர்.பின், 2,000க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது. மேலும், பக்தர்கள், அலகு, ராட்சத வேல், கூண்டுவேல், மணி வேல், பறவை காவடி எடுத்து, முருகன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.தொடர்ந்து, மூலவர் அருட்கோட்டம் முருகனுக்கு, பாலாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று, தீர்த்தவாரி, கொடியிறக்கம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன், சித்ரா பவுர்ணமி பெருந்திருவிழா நிறைவுறுகிறது.