உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தினமலர் செய்தி எதிரொலி - கட்டடங்க ளுக்கான சுகாதார சான்று ஆன்லைனில் மட்டும் வழங்க உத்தரவு

தினமலர் செய்தி எதிரொலி - கட்டடங்க ளுக்கான சுகாதார சான்று ஆன்லைனில் மட்டும் வழங்க உத்தரவு

சென்னை, சென்னையில், பள்ளி, மருத்துவமனை, விடுதி, ஹோட்டல் உள்ளிட்ட கட்டடங்களுக்கு சுகாதார சான்று வாங்க வேண்டும். கட்டடத்தின் உறுதிதன்மை, தீயணைப்பு உள்ளிட்ட சான்றுகள் வைத்து, மாநகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும்.வார்டு சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர், மண்டல சுகாதார அதிகாரியின் கள ஆய்வு அறிக்கை அடிப்படையில், அவர்கள் கையெழுத்துடன் சான்றிதழ் வழங்கப்படும். இது, சென்னை மாநகராட்சியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நடைமுறை.ஆனால், சில மண்டல சுகாதார அதிகாரிகள், கள ஆய்வு அறிக்கை இல்லாமல், ஒரு நபர் மட்டும் கையொப்பமிட்டு சுகாதார சான்று வழங்கினார். இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.இதையடுத்து, மாநகராட்சி உயர்அதிகாரிகள், ஒரு கையொப்பமிட்டு சான்று வழங்கிய அதிகாரியை அழைத்து விசாரித்தனர்.தொடர்ந்து, சுகாதார சான்றிதழை 'ஆன்லைன்' வழியாக மட்டும் வழங்க வேண்டும் என, மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி கறாராக தெரிவித்துள்ளது.இது குறித்து, மாநகராட்சி உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:சுகாதார சான்றிதழ் ஆன்லைன் வழியாக வழங்குவது, நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.மண்டல சுகாதார அதிகாரிகள், ஆன்லைன் வழியாக வழங்குவதை விரும்பாமல் தன்னிச்சையாக செயல்பட்டதால், இதுபோன்ற முறைகேடு நடந்துள்ளது.பலமுறை எச்சரிக்கை செய்தும், மாநகராட்சி விதியை மீறி, சில அதிகாரிகள் செயல்படுகின்றனர்.பள்ளி, மருத்துவமனைகளில் கள ஆய்வு இல்லாமல் சான்று வழங்க, 25 முதல் 50 ஆயிரம் ரூபாய் கைமாறியது விசாரணையில் தெரிந்தது.முறையாக களஆய்வு செய்யும் சுகாதார அலுவலர் விடுமுறையில் இருக்கும்போது, விதிமீறி, மற்றொரு அதிகாரி சான்றிதழ் வழங்கியது தெரிந்தது.எனவே, சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர், மண்டல சுகாதார அதிகாரி ஆகியோரின் கள ஆய்வு அறிக்கை அடிப்படையில், ஆன்லைன் வழியாக மட்டும் சுகாதார சான்றிதழ் வழங்க, அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.அவர்கள் வழங்கிய சான்றிதழில் சந்தேகம் இருந்தாலோ, புகார் வந்தாலோ வட்டார சுகாதார அதிகாரி, மாநகர சுகாதார நல அதிகாரி ஆகியோர் கள ஆய்வு செய்வர். மாநகராட்சி முழுதும் ஒரே நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தப்பட்டது. மீறி செயல்படும் அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார சான்றிதழ் பெறுவது எப்படி?

மாநகராட்சி இணையதளத்தில் சுகாதார சான்றிதழ் பக்கத்தில், மொபைல் நம்பர், கடவுச்சொல் குறிப்பிட்டு உள்ளே செல்ல வேண்டும். அதில் கேட்கும் விபரங்களை பதிவு செய்து, வரி செலுத்திய ரசீது, கட்டடத்தின் உறுதி தன்மை மற்றும் தீயணைப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். சுகாதார சான்றிதழுக்கு, 100 ரூபாய் மற்றும் தண்ணீரை ஆய்வு செய்ய 250 ரூபாயை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இந்த ஆவணங்களை வைத்து, சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர், மண்டல சுகாதார அதிகாரி ஆகியோரின் களஆய்வு அறிக்கை அடிப்படையில், சுகாதார சான்றிதழ் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். அதை விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை