வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி டாக்டர் ஆனந்த் பிரதாப் மனைவி உயிரிழப்பு குடும்பத்தினரை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்
ஆதம்பாக்கம்: அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், குடும்பத்தினரை பாதுகாப்பாக நிற்க வைத்துவிட்டு, கதவை திறக்க முயன்ற, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஓய்வுபெற்ற ஆர்.எம்.ஓ.,வின் மனைவி, மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். சென்னை, ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணா நகர் 2வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த் பிரதாப், 64. இவர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஆர்.எம்.ஓ., என்ற நிலைய மருத்துவ அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சசிபாலா, 58. இவர்களது மகள் பூஜா ஆனந்த், 24, மகன் ரோகித் ஆனந்த், 23. இவர்கள், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், செய்வதறியாமல் அனைவரும் கத்தி கூச்சலிட்டனர். அதேநேரம், அறை முழுதும் புகை மூட்டமாக மாறி, நான்கு பேரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த சசிபாலா, தன் கணவர், மகன், மகளை பாதுகாப்பாக கழிப்பறைக்குள் நிற்க வைத்து விட்டு, முன் அறை கதவை திறக்க முயற்சித்து, முதல் அறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதற்கிடையே, கதறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேளச்சேரி, அசோக் நகர், கிண்டி தீயணைப்பு வீரர்களும், ஆதம்பாக்கம் போலீசாரும், வீட்டின் பால்கனி வழியாக உள்ளே சென்று, கழிப்பறை கண்ணாடியை உடைத்து, அங்கிருந்த ஆனந்த் பிரதாப், மகன், மகள் ஆகியோரை மீட்டு, அம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, அறை முழுதும் தீயால் எரிந்து நாசமாகியிருந்தது. அந்த அறையில் சசிபாலா மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், முன் அறையில் ஏற்பட்ட மின் கசிவினால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விபத்தில் பலியான சசிபாலா, கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ., சி.எச்.சேகரின் சகோதரி. சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அவர்கள் வீட்டில், 10க்கும் மேற்பட்ட பூனைகளை வளர்த்து வந்தனர். அவை தீயில் சிக்காமல் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.