இணைப்பு சாலையில் வடிகால் பணி மணலியில் போக்குவரத்து பாதிப்பு
திருவொற்றியூர்:திருவொற்றியூர், பகிங்ஹாம் கால்வாய் மேம்பாலம் முதல் மணலி, சி.பி.சி.எல்., சந்திப்பு வரையிலான, 1.5 கி.மீ., இணைப்பு சாலையை, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.மணலியில் இருந்து, திருவொற்றியூர், ஆர்.கே.நகர், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளுக்கும், திருவொற்றியூரில் இருந்து, மணலி, மணலிபுதுநகர், மாதவரம், மீஞ்சூர், கொடுங்கையூர் போன்ற பகுதிகளுக்கும் செல்வதற்கு, இந்த இணைப்பு சாலை பிரதானமாக உள்ளது.இந்த நிலையில், இணைப்பு சாலையையொட்டிய பழைய எம்.ஜி.ஆர்.நகர் பகுதிக்கு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, இரு வாரங்களாக நடந்தது.இதன் காரணமாக, ஒரு வழிப்பாதை அடைக்கப்பட்டு, ஒரு வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும், ஒருவழிப்பாதையில் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.