ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் பூவை பேருந்து நிலையத்தில் நெரிசல்
பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பூந்தமல்லியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தின் வெளியேயும் உட்புறமும் ஆக்கிரமித்து, நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.மேலும், பேருந்து நிலையத்தின் உள்ள செல்லும் சாலை, நிலையத்தின் உள்ளே பேருந்துகள் நிறுத்தும் இடங்களில் கார், வேன், பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்கள், அதிக அளவில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இதனால், பேருந்துகள் வந்து செல்வதற்கும், பயணியருக்கும் இடையூறாக உள்ளது. மேலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர், போலீசார் பாதுகாப்புடன் இரு நாட்களுக்கு முன் பழக்கடை, பூக்கடை, நரிக்குறவர்கள் கடை உள்ளிட்ட, 30 நடைபாதை கடைகளை அகற்றினர்.ஆனால், தனியார் வாகன ஆக்கிரமிப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்களின் வாகனங்கள், பேருந்து நிலையத்தின் உள்ளே நிறுத்தப்படுவதால், நகராட்சி நிர்வாகத்தினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.ஆனால், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் வைத்த நடைபாதை கடைகளை மட்டும், எளிதாக அகற்றி விட்டனர். பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் உள்ளே ஆக்கிரமித்து நிறுத்தப்படும் அனைத்து தனியார் வாகன ஓட்டிகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.