உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் சலுகைகள் தேவை

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் சலுகைகள் தேவை

சென்னை, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் சேவைக்காலம் வரையிலான, பதவி உயர்வுடன் கூடிய ஊதியத்தை, அவரின் குடும்பத்தார் பெற வழிவகை செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து கூட்டமைப்பு தலைவரும், ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரியுமான குணசேகரன் கூறியிருப்பதாவது: காஷ்மீரில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு, நம் முப்படைகள் மிகவும் திட்டமிட்டு, 'ஆபரேஷன் சிந்துார்' வாயிலாக துணிச்சலான பதிலடி கொடுத்தது. இருப்பினும், இந்தப்போரில் ஆயுதப் படைகளிலும், பொதுமக்கள் தரப்பிலும் தவிர்க்க முடியாத சில உயிர் சேதங்கள் நிகழ்ந்துள்ளன. நம் நாட்டிற்காக உயர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான். மற்ற பொது அமைப்புகள், தனியார் அமைப்புகளை போல் இல்லாமல் ஆயுதப் படைகளில் உள்ள யாரும் வேலைநிறுத்தம் செய்வதோ, பணிகளை புறக்கணிப்பதோ இல்லை.அவர்கள், எந்த இடத்தில் பணியில் இருந்தாலும், ஆத்மார்த்தமாக முழு மனப்பான்மையுடன், இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாட்டிற்கு சேவையாற்றுகின்றனர். எதிர்பாராவிதமான அவர்களின் இறப்புக்காகவும், குடும்பத்தாரின் நலனுக்காகவும் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம்.இத்தகைய துணிச்சலான மனிதர்கள், நம் நாட்டிற்காக உயர் தியாகம் செய்யும்போது, ​​இந்தியர்களாகிய நாம், அவர்களுக்காக தற்போது செய்வதைவிட மேலும், அதிகமாக ஏதாவது செய்ய வேண்டும்.எனவே, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் சேவைக்காலம் வரையிலான ஊதியத்தை, அவரின் குடும்பத்தாருக்கு காலமுறை உயர்வு, பதவி உயர்வுகளுடன் தொடர்ந்து பெற வழிவகை செய்ய வேண்டும்.அதன்பிறகும், ஓய்வூதிய பலனும் தொடர வேண்டும் என, நாங்கள் கருதுகிறோம். இந்த சலுகைகள் கூட, நாட்டிற்காக ஆயுதமேந்தியவர்கள் ஆற்றிய மதிப்புமிக்க சேவைக்கு சமமாக முடியாது.எனவே, இந்த கோரிக்கை செவிமடுத்து, அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தினால், இளைஞர்கள் பங்களிப்பு மேலும், மேலும் பெருகும்; ராணுவத்தின் பலன் அதிகரிக்கும். நம் நாட்டை முன்னோக்கி உயரத்திற்கு கொண்டு செல்ல தேவையான பலத்தையும், ஆதரவையும் தர இறைவனை பிரார்த்திப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை