உணவு டெலிவரி ஊழியர் சாலை விபத்தில் பலி
பள்ளிக்கரணை சாலையில் சறுக்கி விழுந்த உணவு டெலிவரி ஊழியர், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே பலியானார். மேடவாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 24; உணவு டெலிவரி ஊழியர். தன் 'டியோ' ஸ்கூட்டரில் சோழிங்கநல்லுாரில் உணவு டெலிவரி செய்து, செம்மொழி சாலை வழியாக, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். பெரும்பாக்கம் அருகே, சேதமடைந்த சாலையில் சிதறி கிடந்த ஜல்லிக்கற்களால் சறுக்கி விழுந்தார். விழுந்த வேகத்தில் 50 மீட்டருக்கு சறுக்கியவாறு சென்று அங்கிருந்த இரும்பு டேங்கில் மோதி, தலையில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன், சம்பவ இடத்திலே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், கார்த்திகேயன் உடலைக் கைப்பற்றி விசாரிக்கின்றனர். மெட்ரோ ரயில் திட்டப்பணி காரணமாக, அச்சாலை முழுதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக்கு முன் சீரமைக்க, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.