உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தப்பித்தால் போதும் என ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய கால்பந்து ரசிகர்கள்

 தப்பித்தால் போதும் என ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய கால்பந்து ரசிகர்கள்

சென்னை: அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸியை பார்க்க, கொல்கட்டா சென்ற தமிழக ரசிகர்கள், 'தப்பித்தால் போதும்' என, நேற்று முன்தினம் இரவு, சென்னைக்கு ஏமாற்றத்துடன் திரும்பினர். அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக, இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம், கொல்கட்டாவிற்கு சென்றார். அவரை பார்க்க, சென்னையில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சென்றனர். அங்கு நடந்த களேபரத்தில், அவரை பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் அவர்கள் அளித்த பேட்டி: நாங்கள் ஆறு பேர், விமானம் வழியே, 25,000 ரூபாய் வரை செலவு செய்து, கொல்கட்டா சென்றோம். எங்களை போன்று பல மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் 'கொல்கட்டா சால்ட் லேக்' மைதானத்தில் குவிந்தனர். மைதானத்திற்கு வரும் மெஸ்ஸி, ரசிகர்களுக்கு அருகில் சென்று, இளம் கால்பந்து வீரர்களுடன் விளையாடுவார் என, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதனால், நாங்கள் அனைவரும் உற்சாகத்தில் இருந்தோம். அப்போது, மைதானத்திற்குள் வந்த மெஸ்ஸி, சிலையை திறந்து வைத்த 15 நிமிடங்களிலேயே அங்கிருந்து கிளம்பி சென்றார். மேலும், அரசியல் பிரமுகர்கள் சிலர் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். இது, 10,000 ரூபாய் வரை செலவு செய்து அவரை பார்க்க வந்த, ரசிகர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. முதலில் விசில் அடித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தியவர்கள், பின் மைதானத்திற்குள் புகுந்து, அனைத்தையும் உடைக்கத் துவங்கினர். இதனால் ஏற்பட்ட தள்ளு - முள்ளு காரணமாக, பலருக்கு காயம் ஏற்பட்டு, மிகப் பெரிய கலவரமானது. சிறிது நேரத்தில் காவல் துறையினர், அவர்களை அடித்து விரட்டினர். தப்பித்தால் போதும் என, நாங்களும் ஏமாற்றத்துடன் சென்னைக்கு வந்துவிட்டோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ