உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொளத்துாரில் மட்டும் அடிக்கடி ஆய்வு அமைச்சர், மேயர் மீது மக்கள் விரக்தி

கொளத்துாரில் மட்டும் அடிக்கடி ஆய்வு அமைச்சர், மேயர் மீது மக்கள் விரக்தி

சென்னை:முதல்வர் தொகுதியான கொளத்துார் தொகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, அமைச்சரும், மேயரும் அடிக்கடி ஆய்வு நடத்தி வருவதால், மற்ற தொகுதி மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், கொளத்துார் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, அனைத்து துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.அப்போது, கொளத்துார் தொகுதியில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை நடந்தது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திலும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். ஆனால், முதல்வர் தொகுதி என்பதால், மாதத்திற்கு ஒருமுறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மற்ற தொகுதிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. மேயர் பிரியாவும், மத்திய சென்னை, தென்சென்னைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கொளத்துார் தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல், மற்ற தொகுதிகளிலும் அமைச்சரும், மேயரும் ஆய்வுக்கூட்டத்தை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ