கருடசேவை உத்சவம்
சென்னை:தி.நகர்., பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில் கருடசேவை உற்சவம் நேற்று விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தாயாரை தரிசித்தனர். சென்னை, தி.நகரில் அமைந்துள்ளது பத்மாவதி தயார் கோவில். திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் விமர்சையாக நடந்தப்படுகிறது. இந்தாண்டு பிரம்மோற்சவம் கடந்த,7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 8ம் தேதி முதல் சேஷ, ஹம்ச, முத்துப் பந்தல், சிம்ம, கல்ப விருக்ஷ, ஹனுமந்த, பல்லக்கு, கஜ வாகனங்களில் தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவில் பிரதான நாளான நேற்று காலை சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். இதையடுத்து, மதியம் ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. நேற்று இரவு பத்மாவதி தாயார் சர்வ அலங்காரத்துடன் கருட வாகனத்தில் எழுந்தருளி உட்பிரஹாரத்தை வலம் வந்து கோவில் முகப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், வீதி புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை சூர்ய பிரபை வாகன புறப்பாடும், இரவு சந்திர பிரபை வாகன சேவையும் நடக்கிறது. 14ம் தேதி ரத உற்சவமும், 15ம் தேதி சக்ர ஸ்நானமும் நடக்கிறது. ***