25 கிராம் ஹெராயின் கடத்தல் அசாம் வாலிபர்கள் கைது
ஆலந்துார், ஏப். 23-மீனம்பாக்கம், பரங்கிமலை பகுதிகளில், ஹெராயின் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக, பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, தனிப்படை போலீசார் ஜி.எஸ்.டி., சாலை, அஞ்சலகம் அருகில் நேற்று முன்தினம் இரவு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில், அவர்களிடம் ஹெராயின் எனும் போதைப் பொருள், 25 கிராம் இருப்பது தெரிந்தது. இருவரையும் பரங்கிமலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.அதில், அவர்கள் அசாம் மாநிலம், நாகான் மாவட்டம், திங் பகுதியை சேர்ந்த மன்சூல் இஸ்லாம், 28, முபாரக் அலி, 27, என்பது தெரிந்தது.அசாமிலிருந்து ஹெராயின் கடத்தி வந்து, சென்னை முழுதும் விற்பனை செய்வது தெரியவந்தது. பின், அவர்கள் கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.