உயர்மட்ட மேம்பாலப்பணியால் அண்ணாசாலையில் கடும் நெரிசல்
சென்னை, சைதாப்பேட்டை-தேனாம்பேட்டை மேம்பால கட்டுமான பணியால், அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையே, 621 கோடி ரூபாயில் 3.20 கி.மீ., உயர்மட்ட மேம்பாலச்சாலை கட்டும் பணி நடந்து வருகிறது. மும்பையை சேர்ந்த ஜெ.குமார் என்ற கட்டுமான நிறுவனம், இப்பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போதுவரை 40 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பு அடித்தள பணிகளை முடிக்க வேண்டும். போக்குவரத்து போலீஸ், மின்வாரியம், சென்னை மாநகராட்சி, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் தாமதமாகும் சூழல் நிலவி வருகிறது. மேலும், மேம்பால பணியால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள், மாநகர பஸ் பயணியர் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதைதொடர்ந்து மேம்பால கட்டுமான பணி நடக்கும் இடத்தில் நேற்றிரவு அமைச்சர் வேலு, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் சரவண செல்வம், ஜெ.குமார் கட்டுமான நிறுவன வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர். பணிகள் நடக்கும் இடங்களில், போக்குவரத்து போலீசார், மின்வாரியம், மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், வன்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ***