உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மெரினா கடைகள் விவகாரம் மாநகராட்சி மீது ஐகோர்ட் அதிருப்தி

 மெரினா கடைகள் விவகாரம் மாநகராட்சி மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் தேவி. இவர், மெரினா கடற்கரையில் தனக்கு ஒரு கடை ஒதுக்கக்கோரி, கடந்த ஜூலை 5ல் மாநகராட்சி கமிஷனருக்கு மனு அளித்தார். மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு, 'மெரினாவில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்த, மாநகராட்சியிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என்பது குறித்தும், இந்த நீண்டகாலப் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வுமுன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.இளங்குமரன், ஜி.சத்தியநாராயணன் ஆஜராகி, 'இந்த வழக்கில், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, இதுவரை எவ்வித நடவடிக்கையும், மாநகராட்சி எடுக்கப்படவில்லை' என்றனர். அப்போது, மாநகராட்சி தரப்பில் டி.பி.ஆர்.பிரபு ஆஜராகி, ''நீதிமன்றம் உத்தரவை அடுத்து, 'ட்ரோன் சர்வே' பணிகளும், நேரடி ஆய்வும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்றார். இதையடுத்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி அறிக்கை தாக்கல் செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 'ஆசிய அளவில் பெரிய கடற்கரையான மெரினா கடற்கரை மேம்பாட்டில் அக்கறை காட்டவில்லை. 'இதை சரியான அணுகுமுறையாக கருத முடியாது' எனக்கூறி, இந்த விவகாரம் தொடர்பாக டிச., 10ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ