நொளம்பூரில் உயர்மட்ட பாலம் தயார் மழைக்கால போக்குவரத்து இனி ஈசி
மதுரவாயல் :மழைக்காலத்தில் மதுரவாயல் கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, நொளம்பூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படும். அதற்கு தீர்வாக, கட்டப்பட்டு வந்த உயர்மட்ட பாலப்பணி முடிந்து, விரைவில் திறக்கப்பட உள்ளது. மதுரவாயல் பகுதியில் பாயும் கூவம் ஆற்றின் குறுக்கே, திருவேற்காடு, அடையாளம்பட்டு, மதுரவாயல், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், தரைப்பாலங்கள் உள்ளன. கடந்த 2022, நவ., - டிச., மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேற்கண்ட தரைப்பாலங்கள் மூழ்கின. அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து, உள் கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்ட நிதியின் கீழ், மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே இரு இடங்களில் உயர்மட்ட பாலம் கட்ட, மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி, நொளம்பூர் யூனியன் சாலை - பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 31.65 கோடி ரூபாய் மதிப்பிலும்; சின்ன நொளம்பூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 42.71 கோடி ரூபாய் மதிப்பிலும், இரு பாலங்கள் கட்டும் பணி 2023ல் துவங்கியது. இதில், நொளம்பூர் யூனியன் சாலையில் 115 மீ., நீளம் மற்றும் 12 மீ., அகல இருவழி பாதை பாலம் கட்டுமானப் பணி முடிந்து, வண்ணம் பூசூம் பணி நடந்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் இந்த மேம்பாலம் திறக்கப்படும் என, மாநகராட்சி மேம்பால துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சின்ன நொளம்பூர் பகுதியில், 245 மீ., நீளம், 20.7 மீ., அகலத்தில் நான்கு வழிப்பாதையாக கட்டப்பட்டு பாலப்பணி, இன்னும் முடியவடையாமல் இருக்கிறது. பணிகள் நடக்கும் இடம் வழியாக, 230 கிலோ வாட்ஸ் மின் வடம் செல்கிறது. இந்த மின் வடத்தை மாற்றி அமைக்க தாமதம் ஏற்பட்டதால், கட்டுமான பணியை துவக்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் டிசம்பருக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பாலங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், மழைக்காலத்தில் தடை செய்யப்படும் போக்குவரத்து பிரச்னை இனி ஏற்படாது.