மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது
பெரும்பாக்கம் :மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசைன், 39. இவரது மனைவி சுப்ரியா பேகம், 26. இருவரும் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்தனர். தம்பதிக்கு 7 வயதில் மகன் உள்ளார். இவர்கள், பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், கடந்த நான்கு மாதமாக வசித்து வந்தனர்.இருவருக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, ஜாஹிர் உசைன் தன் மாமியாரை மொபைல் போனில் அழைத்து, 'சுப்ரியா பேகத்திற்கு உடல் நிலை சரியில்லை; மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்' என கூறியுள்ளர்.இதையடுத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்ரியா பேகம், சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் உயிரிழந்தார். பெரும்பாக்கம் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து, சுப்ரியா பேகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. அதில், சுப்ரியா பேகம் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேக மரணத்தை, கொலை வழக்காக மாற்றி, ஜாஹிர் உசைனிடம் விசாரித்தனர். விசாரணையில், சுப்ரியா பேகத்திற்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதை விடும்படி பலமுறை கூறியும் கேட்கவில்லை. இது தொடர்பாக நடந்த தகராறில், கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.இதையடுத்து, ஜாஹிர் உசைனை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.