ரயில் முன் பெண்ணை தள்ளி கொன்ற வழக்கு வாலிபர் சதீஷ் குற்றவாளி என அறிவிப்பு
சென்னை:சென்னை பரங்கிமலையில் ரயில் முன் இளம்பெண்ணை தள்ளி கொலை செய்த வழக்கில், வாலிபர் சதீஷை குற்றவாளி என, சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விபரங்களை, வரும் 30ம் தேதி தெரிவிக்கப்படும் என, தெரிவித்துள்ளது.சென்னையை அடுத்த ஆலந்துார் காவல் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தார்.இவர்களது மூத்த மகள் சத்யா,20, தி.நகரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., தயாளன் என்பவரின் மகன் சதீஷ்,31 என்பவரை காதலித்து வந்தார்.பெற்றோர் கண்டித்ததால் சத்யா, திடீரென காதலை கைவிட்டார். இதில் மனமுடைந்த சதீஷ், சத்யாவிடம் தன் காதலை ஏற்க வைக்க போராடினார். போராடியும் முடியாத நிலையில், 2022 அக்.13ல் கல்லுாரி செல்ல, பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை, அவ்வழியே வந்த ரயில் முன் தள்ளி, சதீஷ் படுகொலை செய்தார்.இதையறிந்து துக்கம் தாங்காமல் அன்றைய தினமே, மாணவியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மகள் கொலையான சில மணி நேரத்தில் தந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சத்யா கொலை வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சதீஷை கைது செய்தனர்.விசாரணை முடிந்த நிலையில், சதீஷ் மீது கடந்தாண்டு ஜன.11ல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின், இந்த வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கில், போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால், சதீஷ் மீதான குற்றச்சாட்டு கடுமையானது என்பதால், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினார்.வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.வழக்கில் அனைத்து தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்படும் என, நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி அறிவித்தார். அதன்படி, கைதாகி சிறையில் இருந்து வரும் சதீஷ், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது, தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302--கொலை ஆகியவற்றின் கீழ், சதீஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது எனக் கூறி, அவரை குற்றவாளி என, நீதிபதி அறிவித்தார்.தண்டனை விவரம் வரும் 30ம் தேதி தெரிவிக்கப்படும் எனக்கூறிய நீதிபதி, அன்றைய தினம் சதீஷை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.