உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.525 கோடியில் பன்னாட்டு அரங்கம் முட்டுக்காடில் 25 நிபந்தனைகளுடன் அனுமதி

ரூ.525 கோடியில் பன்னாட்டு அரங்கம் முட்டுக்காடில் 25 நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னை, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, 525 கோடி ரூபாயில், பன்னாட்டு அரங்கம் கட்டப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, முட்டுக்காட்டில், 36.7 ஏக்கர் நிலம் தேர்வானது. இந்த நிலம் கிழக்கு கடற்கரை சாலைக்கும், கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. இங்கு, ஒரே சமயத்தில், 1,000 பேர் அமரக்கூடிய அரங்கம், 1,500 பேர் அமரக்கூடிய விழா மண்டபம், 4,000 பேர் வந்து செல்ல கூடிய கண்காட்சி கூடம் என, பிரமாண்டமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இதற்கான வடிவமைப்பு உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை, பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. கடலுக்கு மிக அருகில் அமைவதால், கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி ஒப்புதல் பெற, பொதுப்பணித்துறை விண்ணப்பித்தது.

தனி திட்டம்

இது தொடர்பாக, தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமத்தின் சமீபத்திய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம்: முட்டுக்காடு பன்னாட்டு அரங்கம் திட்டத்தை செயல்படுத்த, அங்கு நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடாது. அருகில் உள்ள கிராமங்களின் மேம்பாட்டுக்கான சிறப்பு வசதிகள் செய்ய, பொதுப்பணித்துறை, ஐந்து கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 25 நிபந்தனைகளை, பொதுப்பணித்துறை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அனுமதி

இதன் அடிப்படையில் பன்னாட்டு அரங்கம் கட்டும் திட்டத்துக்கு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கடலோர ஒழுங்குமுறை விதிகளின் கீழ், இதற்கு ஒப்புதல் பெறும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை