ஐ.பி.எஸ்., அதிகாரி சிவானந்தனின் தி பிரம்மாஸ்திரா அன்லீஷ்டு நுால் வெளியீடு
சேத்துப்பட்டு: மஹாராஷ்டிரா மாநில முன்னாள் டி.ஜி.பி., சிவானந்தன் எழுதிய, 'தி பிரம்மாஸ்திரா அன்லீஷ்டு' என்ற நுால், சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. மஹாராஷ்டிரா மாநில முன்னாள் டி.ஜி.பி., சிவானந்தனின், 'தி பிரம்மாஸ்திரா அன்லீஷ்டு' என்ற நுால் வெளியிட்டு விழா, சேத்துப்பட்டில் நேற்று நடந்தது. விழாவில், புத்தகத்தை வழங்கி சிவானந்தன் பேசுகையில், ''மும்பையை, ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் போன்ற 'டான்'கள் கைப்பற்றி, கடத்தல், கொலை, ரத்த பழி போன்ற சட்டவிரோத செயல்கள் பெருகியிருந்தன. இதற்கு எதிராக பயன்படுத்தப்பட்டது பற்றியதுதான் பிரம்மாஸ்திரம்,'' என்றார். விழாவில், ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மோகன் ராஜன் பேசியதாவது: மும்பையில் மலைபோல் குற்றங்களும், முக்கிய குற்றாவளிகளும் இருந்தனர். போலீஸ் கமிஷனர் சிவானந்தன் குழுவினர், 300க்கும் மேற்பட்ட என்கவுன்டர் வாயிலாக, 2022க்குப்பின் குற்றங்கள் நடக்கவில்லை. இவர் துவங்கிய 'ரொட்டி வங்கி' பலரின் பசியை போக்கியது; உலக சாதனையும் படைத்துள்ளது. சிவானந்தனின் புத்தகத்தில், ஒவ்வொரு அத்தியாயமும் வாசிப்போரை ஆழமாக ஈர்க்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி யஷோவர்தன் ஆசாத் பேசுகையில், ''பொள்ளாச்சியில் இருந்து வந்த இளைஞர், சென்னை வழியாக மஹாராஷ்டிரா சென்று, மும்பை மக்களின் அன்பை பெற்றது பெரும் சாதனை,'' என்றார்.