தார்ச்சாலையில் கிளம்பும் புழுதியால் வாகனங்கள் பகிங்ஹாமில் பாயும் அபாயம்?
திருவொற்றியூர், தார்ச்சாலையில் கிளம்பும் புழுதியால், வாகனங்கள் பகிங்ஹாம் கால்வாயில் பாயும், அபாயம் ஏற்பட்டுள்ளது.திருவொற்றியூர் குப்பைமேடு முதல் கார்கில் நகர் - கழிவெளி நிலம் வரையிலான, பகிங்ஹாம் கால்வாய் ஒட்டிய தார்ச் சாலையை, தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் கனரக வாகன போக்குவரத்தும் அதிகம். தவிர, கார்கில் நகர், ராஜாஜி நகர் மக்கள் பயன்பெறும் வகையில், மாநகர பேருந்தும் இச்சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தார்ச்சாலை, பள்ளம் மேடுமாக இருப்பதால், போக்குவரத்து சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வந்தனர்.தவிர, சில இடங்களில், தார்ச்சாலையும், பகிங்ஹாம் கால்வாயின் தடுப்பு சுவரும் ஒரே மட்டத்தில் இருப்பதால், வாகனங்கள் கால்வாய்க்குள் நிலைதடுமாறி விழ வாய்ப்புள்ளது என, அச்சம் தெரிவித்தனர்.இந்நிலையில், இரு தினங்களாக அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களால், ஆளை மறைக்கும் அளவிற்கு புழுதி கிளம்பி வருகிறது.இதனால், முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புழுதி இருப்பதால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. பள்ளம் மேடு தெரியாமல் நிலைதடுமாறும் வாகனங்கள், பகிங்ஹாம் கால்வாய் தெரியாமல், உள்ளே பாய்வதற்கும் வாய்ப்புள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.