மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு
23-Oct-2025
பிராட்வே: வழக்கறிஞரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாரிமுனை பகுதியில் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகரைச் சேர்ந்த சதீஷ்; ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர். இவர், ஆக., 15ம் தேதி, புளிந்தோப்பில் உள்ள கடையில், பிரியாணி வாங்க நின்றிருந்தார். அங்கு வந்த, புளியந்தோப்பு போலீசார் அவரை விரைவாக செல்லுமாறு அறிவுறுத்தினர். இதன் காரணமாக, வழக்கறிஞர் - போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், வீடியோ எடுத்த சதீஷின் மொபைல் போன் உடைக்கப்பட்டதாகவும், அவரை போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில், வடக்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடுவதென முடிவானது. அதன்படி, பாரிமுனை, ராஜாஜி சாலையில் இருந்து புறப்பட்ட, 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை, போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து, சாலையிலேயே தடுத்து நிறுத்தி பேச்சு நடத்த முயன்றனர். உடனே, ராஜாஜி சாலையில் அமர்ந்து வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். தாக்கிய போலீசாரை ஐந்து மணி நேரத்தில், பணிநீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தால், பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன், பூக்கடை துணை கமிஷனர் சுந்தரவடிவேலு ஆகியோர் பேச்சு நடத்தினர். அதில், உடன்பாடு எட்டப்படாத நிலையில், வடக்கு மண்டல இணை கமிஷனர் மனோகர், அங்கு வந்து இந்த விவகாரத்தில் ஒருவாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, இரண்டு மணி நேரமாக நீடித்த மறியல் போராட்டத்தை கைவிடப்பட்டு, வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.
23-Oct-2025