மேகவெடிப்பையும் எதிர்கொள்வோம்!
சென்னை:''சென்னையில் மேகவெடிப்பு காரணமாக அதிக மழை பெய்தாலும், அவற்றை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது,'' என, மாநகராட்சி இணை கமிஷனர் சரவணன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில், வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இயந்திரங்களை சரிபார்த்த தயார்படுத்தும் பணி நேற்று நடந்தது. இப்பணியை செய்த, மாநகராட்சி இணை கமிஷனர் சரவணன் கூறியதாவது: மழைநீர் கால்வாய் துார் வாருதல், சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை, செப்., 30க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக, வடகிழக்கு பருவமழை வாயிலாக, 80 செ.மீ., மழை சென்னைக்கு கிடைக்கும். ஒரே நாளில், 'மேக வெடிப்பு' போன்ற சூழல் வந்தாலும், எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், 700 மோட்டார் பம்புகள் தயாராக உள்ளன. கூடுதலாக, 150 மோட்டார்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.