டி.பி.ஐ.,யில் கார் கண்ணாடி உடைத்தவர் கைது
சென்னை,நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்தது மட்டுமின்றி, ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன், 34; ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் பழனிசாமியின் கார் ஓட்டுநர். கடந்த 20ல் டி.பி.ஐ., வளாகத்தில் காரை நிறுத்தி, 22ம் தேதி எடுக்க வந்தார்.அப்போது, காரில் உள்ள அனைத்து கண்ணாடிகளும் உடைக்கப்பட்டிருந்தன. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, டி.பி.ஐ., அலுவலகம் வெளியே, நடைபாதையில் டீக்கடையில் பணியாற்றி வரும் பெஞ்சமின், 45, என்பவர், கார் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது.மேகநாதன், இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தகாத வார்த்தையால் பேசியதோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார், பெஞ்சமினை நேற்று கைது செய்தனர்.