கன்டெய்னர் லாரி ஓட்டுநரின் மண்டையை உடைத்தவர் கைது
துறைமுகம்: கன்டெய்னர் லாரி ஓட்டுநரின் மண்டையை உடைத்த, மற்றொரு லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், 30; கன்டெய்னர் லாரி ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் துறைமுகத்துக்குள் லாரியுடன் வரிசையில் காத்திருந்தார். அப்போது, மற்றொரு லாரி ஓட்டுநரான திருவாரூரைச் சேர்ந்த அஜித்குமார், 28 என்பவர், லாரியை வேகமாக ஓட்டி வந்தபோது, ஆனந்தின் லாரியில் மோதி கண்ணாடி உடைந்துள்ளது. இதை குறித்து ஆனந்த் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், ஆனந்தை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, லாரியில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில், ஆனந்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்கு பதிந்த துறைமுகம் போலீசார், அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.