ஷேர் ஆட்டோ திருடிய நபர் சிக்கினார்
மாதவரம்,பெரியார் நகர், மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபி, 39; ஷேர் ஆட்டோ ஓட்டுனர்.இவர், ஷேர் ஆட்டோவை சர்வீஸ் செய்வதற்காக, கடந்த 10ம் தேதி இரவு சுபாஷ் நகரில் உள்ள மெக்கானிக் கடை வாசலில் நிறுத்தி சென்றார்.மறுநாள் காலை சென்று பார்த்தபோது, ஆட்டோ திருடுபோனது தெரிந்தது. இது குறித்து, மாதவரம் போலீசில் புகார் அளித்தார். கடையில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்தனர். இதில், ஆட்டோவை திருடியது, பொன்னியம்மன் மேடு, சிவகணபதி நகரைச் சேர்ந்த சீனிவாசன், 48, என தெரிந்தது.ஆட்டோவை மீட்ட போலீசார், சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.