உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரிகள் திறப்பால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது

ஏரிகள் திறப்பால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதால், புறநகர் பகுதிகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி நீர்மட்டமும் உடையது. கன மழையால் இந்த ஏரியின் நீர்மட்டம், நேற்று காலை நிலவரப்படி 23.29 அடியும், கொள்ளளவு 3.45 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது. ஏரிக்கு வினாடிக்கு 6,498 கன அடி நீர் வந்தது.இதையடுத்து, உபரி நீர் திறப்பு 4,500 கன அடியாக உயர்த்தப்பட்டது. ஏரியில் இருந்து வெளியேறும் நீரால், குன்றத்துார் - -ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், குன்றத்துார் மேம்பாலம் அருகே சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.ஏரியின் உபரி நீர் செல்லும் சிறுகளத்துார், காவனுார், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாற்றின் இருபுறமும் தாழ்வாக உள்ள பகுதிகளுக்கு, அரசு தரப்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி, செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று ஆய்வு செய்தார்.அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் எந்தவித அச்சமும், பயமும் கொள்ள தேவையில்லை,'' என்றார்.அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள காயிதே மில்லத் நகர், சீனிவாச புரம் பகுதிகளை, பல்லாவரம் தி.மு.க., --- எம்.எல்.ஏ., கருணாநிதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊருக்குள் தண்ணீர் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, அணுகு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.பெருங்களத்துாரில் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதியான அன்னை அஞ்சுகம் நகரில் வசிக்கும் 90 குடும்பத்தினர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, தாம்பரம் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

புழல் ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 20.86 சதுர கி.மீட்டர் பரப்பளவில் உள்ளது. மொத்த நீர்மட்டம் 21.20 அடி; கொள்ளளவு 3.300 டி.எம்.சி., தொடர் மழை காரணமாக, ஏரியில் 2.950 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பியது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,281 கன அடியாக நீர்வரத்து இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று காலை வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.விளாங்காட்டுபாக்கம், நாரவாரிகுப்பம், வடகரை, மஞ்சம்பாக்கம், மணலி மற்றும் சடையாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, வெள்ள முதற்கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டது.நேற்று, விளாங்காட்டுபாக்கம் பகுதி முழுதும் வெள்ளம் சூழ்ந்தது. மஞ்சம்பாக்கம் நெடுஞ்சாலையிலும் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதித்தது.

இரட்டை ஏரி

கொரட்டூர் ஏரியின் உபரிநீர், சூரப்பட்டு வழியாக விநாயகபுரம் தரைப்பாலம் வழியே, இரட்டை ஏரிக்கு செல்லும் வழியில் கால்வாய் கரைகளை சேதப்படுத்தி பாய்ந்தது. நேற்று காலை, கால்வாய் மதகை தாண்டி விநாயகபுரம், விஜயலட்சுமி புரம், புத்தகரம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.அதேபோல், இரட்டை ஏரியில் எம்.ஜி.ஆர்., நகர் அருகே உள்ள மதகை தாண்டி தண்ணீர் வெள்ளமாக பாய்ந்தது. இதனால் வடபெரும்பாக்கம், பாலாஜி நகர் வெள்ளநீரில் மூழ்கியது. கால்வாய் கரை ஓரம் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் சிக்கின.

முடிச்சூர் ஏரி

முடிச்சூரில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டி, 64 ஏக்கர் பரப்பளவு உடைய பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. 15 அடி ஆழம் உடைய ஏரியில், இரண்டு இடங்களில் கலங்கல்கள் உள்ளன.இவ்வேரி நிரம்பினால், கேப்டன் சசிகுமார் நகர் கலங்கல் வழியாக உபரி நீர் அடையாறு ஆற்றுக்கு செல்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகும், இந்த கலங்கல் சீரமைக்கப்படாமல், பலவீனமடைந்துள்ளது. கீழ்பகுதியில் இரண்டு இடங்களில் அரிக்கப்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது; பக்கவாட்டு சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது. முடிச்சூர் பெரிய ஏரியின் கலங்கல் உடைந்தால் ஒட்டியுள்ள 10க்கும் மேற்பட்ட பகுதிகள் மற்றும் சமீபத்தில் திறக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.

தடுப்பணை உடைப்பு

தாம்பரம் அருகே வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகரில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கவும், வீணாகும் மழை நீரை தேக்கி வைக்கவும், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஒரத்துார் ஏரி, ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, அடையாறு கிளைக்கால்வாயின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இந்த பணிகளில், 80 சதவீதம் முடிந்த நிலையில், ஒரத்துாரில் 84 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், 420 மீட்டருக்கு நீர்த்தேக்கத்தின் கரை அமைக்கப்படவில்லை.மழைக்காலத்தில், அந்த வழியே நீர்தேக்கத்திற்கு வரும் வெள்ள நீர் வெளியேறி, ஒரத்துார் விவசாய நிலத்தை சூழ்ந்தது.இதைத்தடுக்க, நீர்த்தேக்கத்தின் உள்ளேயே தற்காலிக கரை அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்டு, மண் மூட்டைகள் அடுக்கி சரிசெய்யப்பட்ட அதே இடத்தில், நேற்று மீண்டும் உடைப்பு ஏற்பட்டது.அதில் வெளியேறும் நீர், விவசாய நிலத்தை மூழ்கடித்து செல்வதால், வரப்புகள் சேதமாகி, வயல்வெளி மண்ணால் மூடப்படும் ஆபத்து உள்ளது என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 775 ஏரிகள் நிரம்பி, பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால், 8,750 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தரைப்பாலங்கள் மூழ்கியும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.வெண்பாக்கம் -- ரெட்டிபாளையம் இடையே, தென்னேரி ஏரி உபரி நீர் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர் செல்லும் நீஞ்சல் மதகு கால்வாய் வெள்ள நீரில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பூண்டியில் நீர் திறப்பு: 2,000 ஏக்கர் பயிர் சேதம்

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3.21 டி.எம்.சி., தற்போது 3.20 டி.எம்.சி., தண்ணீர் உள்ளதால், இரண்டு நாட்களாக உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று, 16 மதகுகளில், 12 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு, 16,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தாமரைப்பாக்கம் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.பூண்டியில் இருந்து எண்ணுார் வரை உள்ள, 29 கிராமங்கள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயலில் மழைநீர் தேங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று மாலை பூண்டி நீர்த்தேக்கத்தை பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில், 359 ஏரிகள் ௧00 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. இதே போல், குளம், குட்டை என, 1,627 நீர்நிலைகள் முழு அளவில் நிரம்பி உள்ளது.

வழியும் ஏரிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பே, 71 ஏரிகள் முழுமையாக நிரம்பின. இரண்டு நாட்களில் பெய்த கனமழையால், ஒரே நாளில் மேலும் 41 ஏரிகள் நிரம்பின. சோமங்கலம் ஏரி, மணிமங்கலம் ஏரி, ஒரத்துார் நீர்த்தேக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால், அடையாறு கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், வரதராஜபுரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. விஜய் நகரில், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய ஒரு குடும்பத்தினரை, தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று, நேற்று மீட்டனர்.

சுவர் இடிந்து மூதாட்டி பலி

காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் உள்ள குளக்கரை பகுதியில் சின்னக்குழந்தை, 69 என்ற மூதாட்டி வசித்து வந்தார். சிமென்ட் ஷீட் போட்ட வீட்டில், தனியாக வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். கனமழையில், நள்ளிரவில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டி படுகாயமடைந்தார். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரிந்தது.

அடையாற்றில் எதனால் வெள்ளம்?

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:பல்வேறு பகுதிகளில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு, 3,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் நீரும், அடையாறு வழியாக கடலில் கலக்கிறது. அதன்படி, அடையாற்றில், 11,500 கனஅடி நீர் தற்போது செல்கிறது. நீரின் அளவு மேலும் உயர்ந்தால் அருகில் உள்ள குடியிருப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பாதிப்பு ஏற்படாத வகையில், பொதுபணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V GOPALAN
டிச 15, 2024 10:29

ஸ்டாலின் 5000 கோடி கடன் vaங்கி 500 கோடி செலவு செய்துவிட்டு 4500 கோடி ரூபாய் 2026 எலக்சன் லஞ்சம் கொடுப்பதற்கு தமிழ்நாட்டு இயற்கையூம் லஅஞ்சும் வாங்கிவிட்டது ஹு


kumar
டிச 14, 2024 21:08

இந்த எம் எல் ஏ கருணாநிதியின் மகனும் மருமகளும் தானே தலித் வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்தியாக புகார் வந்து தலை மறைவானார்கள் ? என்ன ஆச்சு அந்த வழக்கு ? தலித் பெண்ணுக்கு நீதி கிடைத்ததா ? திருமா அதை தொடர்ந்து வலியுறுத்தினாரா ? அல்லது வேங்கை வயல் போல், பிளாஸ்டிக் நாற்காலி போல வருமானத்தை, பதவியை வசதியை நினைத்து மறந்து விட்டாரா?


kumar
டிச 14, 2024 21:05

அமைச்சர் " நீரின் அளவு மேலும் உயர்ந்தால் அருகில் உள்ள குடியிருப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பாதிப்பு ஏற்படாத வகையில், பொதுபணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்." அதெப்படி பாதிப்பு ஏற்படுத்தலாம் " ன்னு சொல்லிட்டு "ஏற்படுத்தாத வகையில் கண்காணித்து வருகின்றனர் " ரெண்டும் சொல்றீங்க ? அது சரி பாதிப்பு ற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுத்தால் சரி ஆனால் சும்மா கண் கவனித்து வருவதற்காக்கவா " அதிகாரிகள் , அமைச்சர்கள் ?


angbu ganesh
டிச 14, 2024 09:30

தொறந்திடுங்க சேமிக்காதிங்கடா ஜனவரில பிப்ரவரில போயி கர்நாடக கிட்ட பிச்சை கேளுங்க இனியாச்சும் திருந்துங்கடா கடவுள் கொடுக்கறத சேமிச்சு தண்ணி கஷ்ட நேரத்துல use பண்ணுங்கடா, நதி நீர் இணைப்பு தமிழ் நாட்டுக்கு சத்யமான்னு யோசிங்கடா அதா செய்யுங்கடா மொதல்ல


புதிய வீடியோ