மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக்: மதுரை அணி வெற்றி
சென்னை, போரூரில் துவங்கியுள்ள மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் - 3.0 போட்டியில், 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.எஸ்.எம்., நகர் ஹாக்கி சங்கம் சார்பில், மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் - 3.0 போட்டிகள், போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கின. போட்டியில், எஸ்.எம்., நகர், ஆனந்த் பிராண்ட்ஸ், ஆதம்பாக்கம் வெட்ரன்ஸ், ஆவடி மாஸ்டர்ஸ், தன்டர் ஸ்குவாட், மெட்ராஸ் நேஷ்னல்ஸ், யுனைடெட் வெட்ரன்ஸ், நீலகிரி வெட்ரன்ஸ், மண்வுட் ஸ்டார்ஸ், மதுரை வெட்ரன்ஸ் ஆகிய, 10 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் வார இறுதி நாள் மட்டுமே நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், மெட்ராஸ் நேஷ்னல்ஸ் மற்றும் மதுரை வெட்ரன்ஸ் அணிகள் எதிர்கொண்டன. முதல் கால்பாதி ஆட்டத்தில், மெட்ராஸ் நேஷ்னல்ஸ் அணி, 'பெனால்டி கார்னர் கோல்' வாயிலாக போட்டியை துவங்கினர். அரை பாதி நேரத்தில் மதுரை வெட்ரன்ஸ் அணி, பீல்ட் கோலுடன் ஆட்டத்தை 1 - 1 சமனானது.தொடர்ந்து, மூன்றாவது கால் பாதி ஆட்டத்திலும், மதுரை வெட்ரன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி, மற்றொரு கோலை அடித்தது. முடிவில், 3 - 1 என்ற கணக்கில், மதுரை வெட்ரன்ஸ் அணி வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில், எஸ்.எம்., நகர் அணி, 5 - 2 என்ற கணக்கில், ஆதம்பாக்கம் வெட்ரன்ஸ் அணியையும், ஆனந்த் ஸ்குவாட் அணி, 2 - 1 என்ற கணக்கில் தண்டர் ஸ்குவாட் அணியையும் வீழ்த்தின. மதுரை வெட்ரன்ஸ் அணி, 3 - 1 என்ற கணக்கில், யுனைடட் வெட்ரன்ஸ் அணியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து வார இறுதி நாட்களில், ஜனவரி 14ம் தேதி வரை நடக்கிறது.