உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர்போர்ட் தடத்தில் மெட்ரோ சேவை பாதிப்பு தொழில்நுட்ப கோளாறால் பயணியர் சங்கடம்

ஏர்போர்ட் தடத்தில் மெட்ரோ சேவை பாதிப்பு தொழில்நுட்ப கோளாறால் பயணியர் சங்கடம்

சென்னை, பொது போக்குவரத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இரு வழித்தடங்களில் செயல்படும் இந்த சேவையில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால், பயணியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.அந்த வகையில் நேற்று மாலை 5:50 மணிக்கு, சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் தடத்தில், மீனம்பாக்கம் அருகில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.இதையடுத்து, சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் நேரடியாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆலந்துார் வரை மட்டுமே இயக்கப்பட்டது.இதேபோல், விம்கோ நகர் - விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்கள், மீனம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. தொழில்நுட்ப பணியாளர்கள், மீனம்பாக்கத்தில் கோளாறு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பின், விம்கோ நகர் - விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது.இந்த கோளாறால், நேரடியாக விமான நிலையம் செல்ல வேண்டிய பயணியர், மூத்த குடிமக்கள் கடும் அவதிப்பட்டனர். சிலர், மாநகர பேருந்துகள், கால்டாக்சி, ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.பயணியர் கூறுகையில், 'போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்ய முடிவதால், மெட்ரோ ரயிலில், தினமும் பயணித்து வருகிறோம். ஆனால், ஆலந்துார் - விமான நிலையம் இணைக்கும் மெட்ரோ வழித்தடத்தில், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது. இதனால் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது' என்றனர்.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'மீனம்பாக்கம் அருகில், மின் வினியோகத்தில் இருந்து ரயில் இயக்குவதற்கான கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டிருந்தது. அதனால் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், விம்கோ நகர் பணிமனை முதல் மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு பின், விமான நிலையத்துக்கு நேரடியாக மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை