திருவொற்றியூர் மேற்கு பகுதியில் மினி பஸ் சேவை நிறுத்தம்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் மேற்கு சுனாமி குடியிருப்பு - காலடிப்பேட்டை வரையிலான, சிற்றுந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது என, மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். சென்னையில், தனியார் மினி பேருந்து சேவை, ஜூன் மாதம் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன. அதன்படி, திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், சுனாமி குடியிருப்பு முதல் காலடிப்பேட்டை வரை, மினி பேருந்து இயக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு மாதமாக இந்த மினி பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பருவ மழை துவங்கவிருக்கும் நிலையில், வெள்ள பாதிப்பின்போது மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை மூடப்படும் சூழல் உள்ளது. அதுபோன்ற நேரங்களில், மேற்கு பகுதியின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையிலான, இந்த சிற்றுந்து சேவை, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மீண்டும் சிற்றுந்து சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் துவங்கும் இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுனாமி குடியிருப்பு - காலடிப்பேட்டை வரையிலான தடத்தில் உள்ள பிரச்னைக்கு தீர்வு கண்டு, மீண்டும் சிற்றுந்து சேவை, அந்த வழித்தடத்தில் துவக்கப்படும். அதுமட்டுமல்லாமல், மேலும் இரு வழித்தடங்களில், சிற்றுந்து இயக்க அனுமதி கிடைத்துள்ளது; விரைவில் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.