துாய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் சென்னை தலைமை செயலகம் முன் போராட்டம்
சென்னை: பணி நிரந்தரம் கோரி, தலைமை செயலகம் முன், 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்கள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மாநகராட்சியில் பணியாற்றிய துாய்மை பணியாளர்களும், அந்நிறுவனத்தின் கீழ் பணியாற்றலாம் என, மாநகராட்சி தெரிவித்தது. அதேநேரம், தனியார் நிறுவனத்தின் கீழ் பணியாற்றினால் எங்களுக்கு ஊதியம் குறைகிறது, பணி பாதுகாப்பு இல்லை எனக்கூறி, துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மாநகராட்சி தலைமை அலுவலகம் முன் 13 நாட்கள் போராட்டம், மாநகராட்சி வார்டு அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை, எம்.எல்.ஏ., விடுதி முற்றுகை என, தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை தலைமை செயலகம் சென்று, 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், முதல்வரை சந்தித்து மனு கொடுக்க போவதாக தெரிவித்தனர். சட்டசபை நடக்கும் நிலையில், போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதனால், ராஜாஜி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின், அனைவரையும் வலுக்கட்டயமாக போலீசார் கைது செய்து, சமூக நலக்கூடங்களில் அடைத்தனர். இச்சம்பவத்தின்போது சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து, துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய கோரி, இரண்டரை மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். 'ஆனால், மாநகராட்சியோ, தி.மு.க., அரசோ எங்களை ஒடுக்கும் செயலில் தான் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும்' என்றனர்.