அம்பத்துாரில் 50க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
அம்பத்துார்;அம்பத்துார் மண்டலத்தில் உள்ள சி.டி.எச்., நெடுஞ்சாலையில், 50க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சென்னை -- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அம்பத்துார் மண்டலம், 81வது வார்டுக்கு உட்பட்ட, சிங்கப்பூர் ஷாப்பிங் வணிக வளாகத்திலிருந்து, ஸ்டெட்போர்டு மருத்துவ மனை வரையிலான 1 கி.மீ., துாரத்திற்கு நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்றுநடந்தது. அம்பத்துார் மண்டல 81வது வார்டு உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அம்பத்துார் போக்குவரத்து போலீசார் முன்னிலையில், 30க்கும் மேற்பட்ட சாலையோர தள்ளுவண்டி உணவகங்கள் மற்றும் இதர கடைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. மேலும், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் 20க்கும் மேற்பட்ட பெயர் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட்ட உணவக அடுப்புகள், ஜெனரேட்டர் உட்பட அனைத்து பொருட்களையும் மண்டல அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாநகராட்சி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். அதேபோல, நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.