40 நாள் பெண் குழந்தையை கொலை செய்த தாய் கைது
நீலாங்கரை ஈஞ்சம்பாக்கம், செல்வா நகரை சேர்ந்தவர் அருண், 32; கார் ஓட்டுனர். இவரது மனைவி பாரதி, 27. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டு ஆகிறது. கடந்த 40 நாட்களுக்கு முன், பாரதிக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. அதில், ஒரு குழந்தை உருவம் வித்தியாசமாக இருந்ததுடன், எப்போதும் அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால், குழந்தையை பராமரிக்க முடியாமல், பாரதி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், ஒரு குழந்தையை காணவில்லை என, நீலாங்கரை போலீசில் நேற்று அருண் புகார் அளித்தார். போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தபோது, வீட்டின் அருகே உள்ள புதரில், ஒரு கட்டை பையில் இறந்த நிலையில் குழந்தை கிடந்தது. போலீசார், குழந்தையின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனை செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீவிர விசாரணையில், குழந்தையை வளர்க்க முடியாமல், அதன் கழுத்தை நெரித்து, தாய் பாரதி கொலை செய்து, கட்டை பையில் வைத்து, வீட்டு மாடியில் இருந்து புதரில் துாக்கி வீசியது தெரிந்தது. பாரதியை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு எதாவது காரணம் இருக்குமோ என, போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.