கார் விற்பனை நிலையமாக மாறிய சாலை கொளத்துாரில் வாகன ஓட்டிகள் அவதி
சென்னை:கொளத்துாரில், கார் விற்பனை நிலையமாக மாறிய சாலையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து, 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக, அண்ணா நகரிலும் அடுத்தடுத்து மற்ற பகுதியிலும் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். அதேநேரம், நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தினால், பூட்டு போடப்படும் என்றும் ஆறு மணி நேரத்திற்கு மேல் வாகனம் நிறுத்தப்பட்டால், அவை அகற்றப்படும் என மாநகராட்சி தெரிவித்திருந்தது. அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தது.ஆனால், 'இந்த உத்தரவுஎல்லாம் எங்களுக்கு இல்லை' என்ற நோக்கில், கொளத்துார் 200 அடி சாலையில், இருபுறமும் தனியார் கார் விற்பனை மையங்கள், தங்களின் கார்களை சாலையையும் நடைபாதையையும் ஆக்கிரமித்து நிறுத்தி வைத்துள்ளன.இதனால், சாலை 20 அடிக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் மெட்ரோ ரயில் நிலையப் பணிகள் நடப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளோ, போக்குவரத்து போலீசாரோ, இதை கண்டும் காணாமல் உள்ளது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.