புறநகரில் வெளுத்து வாங்கிய மழை கழிவுநீரில் மிதந்த மும்மூர்த்தி நகர்
தாம்பரம் : தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், நேற்று மதியம் மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல சாலைகளில் வெள்ளம் தேங்கியது.மழை காலத்தில், துர்கா நகரில் இருந்து வெளியேறும் மழைநீர், ஜி.எஸ்.டி., சாலை கால்வாய் - குரோம்பேட்டை மருத்துவமனைக்குள் செல்லும் கால்வாய் வழியாக, மும்மூர்த்தி நகர் அருகே வீரராகவன் ஏரிக்கு செல்லும்.ஆனால், நேற்று மதியம் பெய்த மழையில், துர்கா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 'செப்டிக் டேங்க்' கழிவு வெளியேறி, மும்மூர்த்தி நகர் சாலையில், குளம் போல் தேங்கியது. இதனால், துர்நாற்றத்தால் அப்பகுதிவாசிகள் பெரும் சிரமப்பட்டனர்.வெளியே செல்ல முடியாத அளவிற்கு நாற்றம் அடித்தது. துர்கா நகரில் இருந்து வெளியேறும் மழைநீர், அரசு மருத்துவமனைக்குள் செல்லாமல், நியூ காலனி, 14வது குறுக்கு தெரு கால்வாயுடன் இணைத்தால், எவ்வித இடையூறும் இன்றி, நேராக வீரராகவன் ஏரிக்கு செல்லும். இதற்கான நடவடிக்கை எடுக்காததால், ஒவ்வொரு மழையிலும், மும்மூர்த்தி நகர் கழிவுநீரில் மிதப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.