உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்

வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்

சென்னை:வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி விழா துவங்கியது. வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு விழா, நேற்று துவங்கியது. வரும் 1ம் தேதி வரை நடக்கும் விழாவில், 'சக்தி கொலு' எனும் பெயரில் பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது. பெண் பக்தர்கள் ஒருங்கிணைந்து, குத்துவிளக்கேற்றி நேற்று விழாவை துவக்கி வைத்தனர். மேலும், காலை, மாலை வேளைகளில், அம்மன் கொலு மண்டபத்தில், சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று, அம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கொலுவை ரசித்தனர். பின், பக்தர்களுக்கு ஆன்மிக வினாடி - வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கொலுவை ரசித்த சிறுவர் - சிறுமியருக்கு சிறப்பு பரிசாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நேற்று மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினர் கொலுபாட்டு நடத்தப் பட்டது. அதைத்தொடர்ந்து நிருத்யர்பணம் நடனப்பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கணேசின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியும் நடந்தது. வடபழனி முருகன் கோவில் கொலுவை காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணிவரையும் கண்டு களிக்கலாம். மாபெரும் கொலு கண்காட்சி அதேபோல, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி பெருவிழா நேற்று துவங்கியது. நவராத்திரி விழாவை அமைச்சர் சேகர்பாபு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கவர்னர் மாளிகையை

அலங்கரிக்கும் 'கொலு'

நவராத்திரியை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் மாளிகையில் கொலு அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று, கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு விழா துவங்கியது. கவர்னர் ரவி துவக்கி வைத்து கொலுவை பார்வையிட்டார். வரும் 1ம் தேதி வரை நடக்கும் விழாவில், தினமும் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை வழிபாடு மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. 'ஆன்லைன்' மூலம் ஏற்கனவே பதிவு செய்த நபர்கள் மட்டுமே, கொலுவை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவர் என, கவர்னர் மாளிகை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை