இலவச குடிநீருக்கு பணம் வசூல் நெமிலிச்சேரி மக்கள் அதிர்ச்சி
நெமிலிச்சேரி : நாகாத்தம்மன் நகரில், இலவசமாக வழங்கப்பட்டு வந்த குடிநீருக்கு, அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு குடத்திற்கு 5 ரூபாய் வசூலிப்பதாக, குற்றச் சாட்டு எழுந்துள்ளது. பூந்தமல்லி ஒன்றியம், நெமிலிச்சேரி ஊராட்சி இரண்டாவது வார்டு, நாகாத்தம்மன் நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்காக சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, 2022 முதல் இலவசமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தினமும் 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். கடந்தாண்டு ஜூலை முதல், குடத்திற்கு 5 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பகுதி மக்களுக்கு மீண்டும் இலவசமாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், இலவச குடிநீர் நிறுத்தப்பட்டு, மீண்டும் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 'பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறுத்தலின்படி குடத்திற்கு 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது' என, சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நாங்கள் யாரும் இலவச குடிநீருக்கு பணம் வசூலிக்க அறிவுறுத்தவில்லை. அங்கு ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு, பொதுமக்களுக்கு மீண்டும் இலவசமாக குடிநீர் வினியோகிக்கப்படும்' என தெரிவித்தனர்.