மேலும் செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி புதிதாக சாலை அமைப்பு
12-Sep-2025
ஆவடி; ஆவடி மாநகராட்சியில், பல பகுதிகளில் இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படாத நிலையில், கோவில்பதாகை, கலைஞர் நகரில் 21 மாதங்களில், இரண்டாவது முறையாக மீண்டும் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி மாநகராட்சி, கோவில்பதாகை 12வது வார்டில், கலைஞர் நகர் முதல் மற்றும் இரண்டாவது சாலையில் உள்ள 22 தெருக்களில், 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 2023ல் இங்கு போடப்பட்ட தார்ச்சாலை, குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறியது. இதையடுத்து, சாலையை 'மில்லிங்' செய்து ஜல்லி கொட்டப்பட்டது. ஆனால், ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. இதனால், வாகன ஓட்டி கள் விபத்தில் சிக்கினர். சாலையை ஒட்டியுள்ள வீடுகள், கடைகளில் புழுதி காற்றில் துாசி படிந்து காணப்பட்டது. கடந்த 2023 டிச., 8ம் தேதி, 'மாண்டஸ்' புயலுக்கு முந்தின நாள், இரவோடு இரவாக அவசர கதியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை சல்லி சல்லியாக பெயர்ந்து பல்லிளித்தது. சாலையின் தரம் குறித்து பகுதிவாசிகள் கேள்வி எழுப்பியதோடு, பல்லிளித்த சாலையை வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இது, வேகமாக பரவியது. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, புதிதாக போடப்பட்ட சாலை மீண்டும் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்ட சாலை, மீண்டும் சேதமடைந்தது. இதையடுத்து, 21 மாதங்களுக்குள் கலைஞர் நகர் பிரதான சாலை மீண்டும் சீரமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக மீண்டும் 28 லட்சம் ரூபாய் ஒதுக்கி, இரு தினங்களுக்கு முன் மீண்டும் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை என்ன? இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுவாக, தார்ச்சாலை போடப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பின் தான் புதிய தார்ச்சாலை போட வேண்டும். அது வரை 'பேட்ச் ஒர்க்' செய்ய அனுமதி உண்டு. ஆனால், கோவில்பதாகை, கலைஞர் நகரில் மாநகராட்சி விதிமீறி நடந்துள்ளது. இன்னும் சாலையே போடாமலேயே பல பகுதிகள் இருக்கும் நிலையில், ஒரு பகுதியில் இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை சாலை போடப்பட்டது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல். எனவே, தரமற்ற நிலையில் சாலை போடும் ஒப்பந்ததாரர் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
12-Sep-2025