கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் இரவு நேர மின்சார ரயில்களால் அவதி
சென்னை, சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.இவற்றில், தினமும் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். குறிப்பாக, செங்கல்பட்டு, அரக்கோணம், சூலுார்பேட்டையில் இருந்து தினமும் சென்னைக்கு வந்து செல்கின்றனர். நள்ளிரவு 12:00 மணி வரை மின்சார ரயில்கள் இயங்குவதால், இரவு பணியை முடித்து செல்லும் பயணியருக்கு, மிகவும் வசதியாக இருக்கிறது.ஆனால், கடைசி நேரத்தில் இரவு நேர ரயில்களை ரத்து செய்வது, பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சென்ட்ரல் - திருவள்ளூருக்கு நேற்று முன்தினம் இரவு 11:00 மணி, ஆவடிக்கு இரவு 11:40 மணி, நள்ளிரவு 12:15 மணி ரயில்கள் ரத்து அறிவிப்பு, மாலை 6:30 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதனால், பணியை முடித்து விட்டு, வீட்டுக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:திருவள்ளூர், அரக்கோணம் போன்ற புறநகர் பகுதிகளில் இருந்து ரயில்களை நம்பியே வந்து செல்கின்றனர். ஆனால், கடைசி நேரத்தில், இரவு நேர ரயில்கள் திடீரென ரத்து செய்வதால், பயணியர் அவதிப்படுகின்றனர். மழை, புயல் போன்ற முடியாத சூழலில், மின்சார ரயில்கள் ரத்து செய்வதை தவிர்க்க முடியாது. ஆனால், வழக்கமான நாட்களில், பராமரிப்பு பணியை காரணம் காட்டி, ரத்து செய்வதை ஏற்க முடியாது. இனியாவது, நள்ளிரவுரயில்கள் ரத்து, ஓரிரு நாட்களுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும்என, கோரிக்கை விடுக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.