உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ பணியால் குடியிருப்பு வீடுகளில் சேதம் கலெக்டரிடம் நொச்சிக்குப்பம் மக்கள் முறையீடு

மெட்ரோ பணியால் குடியிருப்பு வீடுகளில் சேதம் கலெக்டரிடம் நொச்சிக்குப்பம் மக்கள் முறையீடு

சென்னை, மெரினா, நொச்சிகுப்பம், எல்லை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குப்பன், 72. இவருக்கு சொந்தமான மூன்றடுக்கு அடுக்குமாடி குடியிருப்பின், முதல் மற்றும் இரண்டு மாடியின் படிக்கட்டுகள், கடந்த மாதம் 24ம் தேதி இரவு திடீரென இடிந்து விழுந்தன.இதில், வீட்டின் உரிமையாளர் குப்பன், மனைவி ராஜாமணி, 55, ஒன்பது வயது சிறுமி ஆகியோர் காயமடைந்தனர். ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் சுரங்கள் தோண்டும் பணி காரணமாக ஏற்பட்ட விரிசலில் படிக்கட்டுகள் இடிந்து விழுந்தாக, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர். அதேபோல், காமராஜர் சாலையில், 15க்கு மேற்பட்ட வீடுகளில் சேதமடைந்ததாகவும், அவற்றை மெட்ரோ நிர்வாகம், முறையாக சீரமைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, 'விபத்து நடந்த இடத்தில் மெட்ரோ பணிகள் நடக்கவில்லை; 500 மீ., துாரத்திலேயே நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. சுரங்கம் தோண்டும் பணிகள் முடிந்துள்ளதால், விபத்திற்கு மெட்ரோ பணியின் அதிர்வுகள் காரணமில்லை' என, மெட்ரோ நிர்வாகமும் விளக்கம் அளித்திருந்தது.இந்நிலையில், குடியிருப்புகளில் பாதிப்பு ஏற்பட்ட குடுத்தினர், மயிலை நொச்சிகுப்பம் மீனவ கிராம சபை சார்பில், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் முறையிட்டு, மனு அளித்துள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில், நொச்சிகுப்பம் மீனவ கிராம சபையினர் கூறியதாவது:மெட்ரோ பணிக்காக, 2023ல் ஆய்வு செய்யும் போதே தடுத்து நிறுத்தினோம். 'பாதிப்பு ஏற்பட்டால் சீரமைத்து தருவோம்' என, உத்தரவாதம் கொடுத்து, அடையாள அட்டையும் வழங்கி பணி துவங்கினர். சுரங்க பணிகள் நடக்கும் போதே, சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டன. நிர்வாகத்திடம் தெரிவித்தும், முறையாக பதில் அளிக்கவில்லை. குப்பன் வீட்டை போல் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், 15 வீடுகள் சேதமடைந்துள்ளன. சென்னை ஐ.ஐ.டி., அல்லது அண்ணா பல்கலை குழுவை நியமித்து, வீடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.வீடு இடியும் நிலைவிபத்து ஏற்பட்ட போது, நான் அங்கு தான் இருந்தேன். நுாலிழையில் உயிர் தப்பினேன். எங்களது குடும்த்தினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், மெட்ரோ நிர்வாகம் தான் காரணம். கடந்த மே மாதமே எங்களது தரைத்தள வீடு சேதமடைந்தது. இதுகுறித்து மெட்ரோ ஊழியரிடம் தெரிவித்தும் முறையாக விளக்கம் அளிக்கவில்லை. அடுத்தடுத்த மழை வரும்போது, எங்களது வீடும் இடிந்து விழவும் வாய்ப்புள்ளது.- ச.குமாரி, 62,நொச்சிகுப்பம்பழுதுக்கு காரணம் தெரியும்மெட்ரோ சுரங்க பணிக்கு முன் ஆய்வு செய்யும்போது, வீடு முழுதும் புகைப்படம் எடுக்கப்பட்டது. தற்போது பணி முடிந்துள்ளதால், தற்போது வந்து புகைப்படத்தை எடுத்து ஒப்பிட்டு பார்த்தால், வீட்டில் ஏற்பட்ட பழுதுக்கு காரணம் தெரியும். இதுதொடர்பாக, மெரினா காவல் நிலையம், கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.பாரதி, 58,நொச்சிகுப்பம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ