உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 50 அடி அகல சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் அதிகாரிகள் மந்தம்

50 அடி அகல சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் அதிகாரிகள் மந்தம்

கோடம்பாக்கம்: ஆக்கிரமிப்பு வீடுகளால் மாயமான கோடம்பாக்கத்தில் உள்ள 50 அடி அகல சாலையை, அதிகாரிகள் நேற்று அளவீடு செய்தனர்.கோடம்பாக்கம் மண்டலம் 132வது வார்டு, சேர்கான் தோட்டம் மற்றும் வாத்தியார் தோட்டம் இடையே, 50 அடி அகல சாலை இருந்தது.

உத்தரவு

மேற்கு மாம்பலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆரியகவுடா சாலை, வாத்தியார் தோட்டம் 4வது தெரு, ரங்கராஜபுரம் பிரதான சாலை, என்.டி.ஆர்., தெரு, அசோக் அவென்யூ, இயக்குநர்கள் காலனி நான்காவது பிரதான சாலை வழியாக, ஆற்காடு சாலையை அடைய வேண்டும்.சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதால், சாலை மிகவும் குறுகியது. இதனால், ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அப்பகுதி மக்கள், 1997ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.விசாரணைக்கு பின் கண்டறியப்பட்ட 192 ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை மீட்க வேண்டும் என, 2008 ஜன., 8ல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததால், 2014ல் ஆக்கிரமிப்புகளின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்தது.

மீட்கப்படவில்லை

ஆண்டுகள் பல கடந்தும், உயர் நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்தும், சேர்கான் தோட்டம், வாத்தியார் தோட்டம் இடையே உள்ள 50 அடி அகல சாலை மீட்கப்படவில்லை.இந்நிலையில், எழும்பூர் துணை தாசில்தார், கோடம்பாக்கம் மண்டல உதவி கமிஷனர் முருகேசன் உள்ளிட்ட வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, சேர்கான் தோட்டம், வாத்தியார் தோட்டம் இடையே உள்ள 50 அடி அகல சாலையை அளவீடு செய்தனர்.அப்போது ஆக்கிரமிப்பாளர்கள், 'எங்கள் பகுதியை அளவீடு செய்யக்கூடாது; எங்களுக்கு இதே இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என, அதிகாரிகளிடம் தகராறு செய்தனர்.அவர்களிடம் சமரச பேச்சு நடத்திய அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன் அளவீடு முடித்து, புறப்பட்டு சென்றனர்.கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது ஆக்கிரமிப்பு வீடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருப்பதால், உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி அவற்றை விரைவில் அகற்றவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mecca Shivan
ஜூலை 11, 2025 10:26

இது வாக்கு வங்கி அரசியல் .. இரண்டு கழகங்களும் இதற்க்கு உடந்தை.. ஆரிய கவுடா இந்த சாலை பெயரிலும் ஜாதி உள்ளது விரிவு சாலையிலிருந்து நேராக ஆற்காட் சாலை செல்ல முடியும் ..ஆனால் இந்த வழி அடைக்கப்பட்டு முழுவதும் ஆக்கிரமிப்புகள் .. மின்சார இணைப்பு சாக்கடை இணைப்பு என்று சகலவசதிகளும் உள்ளன ..இதே போல டைரக்டர் காலனி இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது


சமீபத்திய செய்தி